ஓசூர்: ஓசூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு உதிர்ந்ததால், மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்பில் 6 வகுப்பறை கூடுதல் கட்டிடம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்.26-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிலையில், நேற்று வகுப்பறை கட்டிடத்தின் வரண்டா பகுதியின் மேற்கூரை கான் கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தன. இதில், மாணவர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் விபரீதம் தடுக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல, வகுப்பறையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கூரை பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கூடுதல் வகுப்பறை கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. புதிய வகுப்பறை கட்டிடத்தில் ஏற்கெனவே 3 முறை இதுபோல கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். உறுதித்தன்மையில் தவறு இருக்கும்பட்சத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.