புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூரில் உள்ள அரசுப் பள்ளியின் முகப்பு. | படங்கள்: கே .சுரேஷ் 
கல்வி

பரிதாப நிலையில் பயிலும் மாணவர்கள்: கட்டிடமின்றி செயல்படும் திருநாளூர் அரசு உயர்நிலைப் பள்ளி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூரில் அரசுஉயர்நிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் செயல்பட்டு வருவதால், விரைவில் பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி அருகே திருநாளூர் தெற்கில் இருந்த அரசு நடுநிலைப் பள்ளி, 2003-ல்அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதே வளாகத்தில் 3 ஆண்டுகள் செயல்பட்டு வந்த உயர்நிலைப் பள்ளி, 2007-ல்வேறொரு இடத்தில் 6 வகுப்பறைகளுடன் கூடிய புதிய அடுக்கு மாடிக் கட்டிடம்,ஒரு ஆய்வகம், கழிப்பறையுடன் கட்டப்பட்டபகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, இங்கு 205 மாணவர்கள் பயில்கின்றனர்.

நாளடைவில் பள்ளியின் வகுப்பறைக் கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுந்ததால், பள்ளிக்கட்டிடம் பயன்படுத்த தகுதி அற்றது எனக் கூறி, அந்தக் கட்டிடம் 2017-ல் மூடி சீல் வைக் கப்பட்டது. பின்னர், 4 ஆண்டுகள் கழித்து,அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் மாணவர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் 6 வகுப்பறைகள் செயல்படும் வகையில் தகர ஷீட் வேயப்பட்ட தற்காலிக கட்டிடடம் கட்டப்பட்டது. அதுவும் போதவில்லை என்று ஊர் சார்பில் சுவர், தரை தளமின்றி ஒரு தகர ஷெட் அமைக்கப்பட்டது. தவிர, இரு அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் தலைமை ஆசிரியர் அறையும், அலுவலகமும் செயல்படுகின்றன.

திருநாளூர் அரசுப் பள்ளியில் வகுப்பறையாக செயல்படும் தகர ஷெட்

இந்த பள்ளியில் தற்போது, தகர ஷீட் மூலம் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டிடமும், மரத்தடியும் மட்டுமே வகுப்பறைகளாகசெயல்படுகின்றன. தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரை என்பதால் வெயில் காலத்தில் மாணவ, மாணவிகள் வெப்பத்தில் தவிக்கும்நிலை. மழை பெய்தால், வகுப்பறைக்குள் தண்ணீர் வந்துவிடும். இதனால், மழை, வெயிலால் மாணவ, மாணவிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே வகுப்பறையே இல்லாத பள்ளியாக செயல்படும் திருநாளூர் அரசுப் பள்ளிக்கு வகுப்பறைக் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என மாணவ,மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் முன்னாள் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம்பள்ளியின் முன்னாள் மாணவர் துரையரசன் கூறியது: இப்பள்ளியில் திருநாளூர்,குளமங்கலம், ஆவணத்தான்கோட்டை, கரிசக்காடு, சிட்டங்காடு, பரவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மழைநீர் உட்புகுந்து காணப்படும் தற்காலிக வகுப்பறை.

கல்வி கற்பிப்பதில் சிறந்த பள்ளியாக திகழும் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துமாறு 2012-ல் அரசுக்கு தொகை செலுத்தி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வகுப்பறைகள் அனைத்தும் தற்காலிகமானவை. மழை பெய்தால் தங்கள் உடமைகளை பாதுகாக்க மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இங்கு அடிப்படை வசதி இல்லாவிட்டாலும், தரமான கல்வி கிடைப்பதால் மாணவர்கள் இந்த பள்ளிக்கு வருகின்றனர்.

எனவே, இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறைக் கட்டிடத்தைக் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியும் கண்டுகொள்ளப்படவில்லை. அடுத்த வாரம் முன்னாள் மாணவர்கள், பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, “நபார்டு திட்டத்தில் பள்ளிக்கு கட்டிடம் கட்டுவது குறித்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT