கல்வி

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி அக்.14-ல் தொடக்கம்: மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி வரும் அக்.14-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வோர் ஆண்டும் செப்.15-ம் தேதி தமிழகத்தில் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ‘அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி’ நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மிதிவண்டிப் போட்டி வரும் 14-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்குகிறது.

இந்த போட்டி காலை 6 மணிக்கு தீவுத்திடலில் தொடங்கி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், நேப்பியர் பாலம், காயிதே மில்லத் பாலம், அங்கிருந்து இடதுபுறம் அண்ணாசாலை வழியாகச் சென்று மீண்டும் தீவுத்திடலில் தொடங்கிய இடத்திலேயே முடிவுபெறும்.

இதில் 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

தலைக்கவசம் அவசயம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பெறுவோருக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இதையொட்டி சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை முன்பதிவுகள் நடைபெறுகின்றன.

போட்டியாளர்கள் வயது சான்றிதழ் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 13-ம் தேதி வரை முன்பதிவு நடத்தப்படும். கூடுதல் விவரங்களை 7401703480,7338980191 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT