பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இரவு நேரத்தில் மதுபாராக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமந்துறை சித்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 270 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி புகும் மர்மநபர்கள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து, மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: சோமந்துறை சித்தூர் அரசுப்பள்ளி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஜில்லா போர்டு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டுவருகிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரை உருவாக்கிய இந்த பள்ளி, தற்போது இரவு நேரத்தில் மது அருந்துவோரின் கூடாரமாக மாறிவருகிறது.
பள்ளி வளாகத்துக்குள் இரவு நேரங்களில் நுழையும் மர்ம நபர்கள், வகுப்பறைகள் முன்பு மது அருந்துகின்றனர். பின்னர் மதுபாட்டில்கள், டம்ளர் ஆகியவற்றை பள்ளி வளாகத்திலேயே வீசிச்செல்கின்றனர். மதுபோதையில் பள்ளியின் கழிவறையையும், கழிவறைக்கு செல்லும் தண்ணீர் குழாய்களையும்உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
பள்ளிக்கு காலையில் வரும் மாணவர்கள் வகுப்பறை முன்பு குவிந்துள்ள மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டுதான் வகுப்பறைக்குள் செல்கின்றனர். பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, மது அருந்துவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பள்ளியில் இரவு நேரக் காவலரை நியமிக்க வேண்டும். பள்ளிக்குள் அத்துமீறி நுழையும் மர்மநபர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.