மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த நின்னைக்கரை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 3 மாதங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தனித்திறன்களை வெளிப்படுத்தி, 103 பதக்கங்களை குவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நின்னைக்கரை பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றாண்டு கொண்டாடிய பள்ளி.தலைமை ஆசிரியராக சீனி. சந்திரசேகரனும், 9 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். இங்கு 1 முதல், 8-ம் வகுப்பு வரை உள்ளது. 321 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
அதில் 280 பேர் தனித்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு நற்சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக, 3 மாதங்களில், கராத்தே தற்காப்புக்கலை, ஓவியப்போட்டி, டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த தூய்மைக்கான மக்கள் இயக்கம் போட்டிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று 103 பதக்கங்களை குவித்துள்ளனர்.
தனித்திறனில் சிறந்து விளங்கும் இப்பள்ளி ஆசிரியர்களும் மாவட்ட, மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர் சீனிசந்திரசேகரன், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று, 4-வது இடம் பிடித்துள்ளார். ஆசிரியை தீபா, மாநில அளவிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.
நென்மேலி உள்ளரங்கில் செங்கை இறகுப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா போட்டிகளில் 15 அணிகள் கலந்துகொண்டன. இதில், தலைமை ஆசிரியர் சீனி.சந்திரசேகரன், ஆசிரியர் பயிற்றுநர் பாரதி ராஜாவுடன் இணைந்து விளையாடி வெற்றி கோப்பையை பெற்றார். அன்பே இறைவன் அறக்கட்டளையின் நல்லாசிரியர் விருது, தமிழ்நாடு பசுமை வாசல் நிறுவனத்தின் தேசத்தின் ஒளிச்சுடர் விருது ஆகியவற்றையும் ஆசிரியர் தினத்தன்று பெற்றுள்ளார்.
பள்ளியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஊர்மக்கள் பலரும், தனியார் பள்ளியில் படித்த தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு மாற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் 235 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இந்த ஆண்டில் 321 ஆக அதிகரித்துள்ளது. அறிவியல் பாடத்துக்கும், தொடக்கநிலை வகுப்புக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதே இப்பள்ளியின் முக்கிய குறையாக உள்ளது.
தூய்மையான குடிநீர் (RO WATER), சமையல் கூடம், வகுப்பறை கட்டிடம் இவையும் பள்ளியின் தேவையாக உள்ளன. இதை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி மாணவர்களின் தனித்திறனை பாராட்டி, முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கடந்த ஜன.9-ம்தேதி இப்பள்ளிக்கு ஒரு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். ‘கலைத் திறனிலும், தனித்திறனிலும் சாதனை படைத்து வரும் இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் சீனி.சந்திரசேகரன் கூறியபோது, ‘‘குழந்தைகள், மாணவர்களில் திறமை இல்லாதவர் என்று யாருமே இல்லை. எல்லா குழந்தைகள், எல்லாமாணவர்களுமே ஏதோ ஒரு வகையில் திறமையானவர்தான். அந்ததிறமையை நாம் கண்டறிய வேண்டும். இப்பள்ளியில் படிக்கும் 321 மாணவர்களின் தனித்திறனையும் கண்டறிந்து, அதில் அவர்களை பயிற்றுவித்து, அத்தனை பேரையும் சான்றிதழ்கள், பதக்கங்கள் பெற வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை, லட்சியம், கனவு’’ என்றார் உறுதியுடன்.
‘‘பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தரும் உற்சாகமும், மாணவர்களின் திறனறிந்து போட்டிகளில் அவர்களை பங்கேற்கச் செய்வதும்தான் எங்கள் பிள்ளைகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர் பெற்றோர்.