பராமரிப்பு இல்லாத கல்லூரி கட்டிடம் 
கல்வி

திருப்பத்தூர் அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அரசு கலை கல்லூரி: நடவடிக்கை எடுப்பது எப்போது?

ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்லூரி கட்டிடம் பழுதடைந்து விரிசல் விட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘கடந்த 2014-ம் ஆண்டு கந்திலி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டது. ரூ.7 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட இக்கல்லூரியில் கணிதம், கணித அறிவியல், கணினி அறிவியல், வணிக மேலாண்மை, கணினி பயன்பாட்டியல், இயற்பியல், பி.ஏ தமிழ் இலக்கியம், பி.ஏ ஆங்கில இலக்கியம், வணிக நிர்வாகம், எம்.ஏ ஆங்கிலம், எம்.காம் வர்த்தகம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல், எம்.எஸ்.சி கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறோம்.

திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்லாமல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரி வளாகம் முழுவதும் ஆங்காங்கே குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

கல்லூரி வளாகத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் மரத்தடியில் நிறுத்தப்பட்டுள்ள
மாணவர்களின் வாகனங்கள்.

குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளதால் தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறையிலும் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் விழுந்துள்ளது.

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், கதவுகள் பெயர்ந்தும் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இரு சக்கர வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால், மழையிலும், வெயிலிலும் வாகனங்களை நிறுத்தி வருகிறோம். கேன்டீன் வசதி இல்லாததால் தண்ணீர் பாட்டில், தேநீர் அருந்த மாணவ, மாணவிகள் வெளியே சென்று வரும் நிலையுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளோம். எனவே, மாணவர்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, நிழற்குடையுடன் கூடிய பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதியும் உள்ளது. பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். உடைந்த ஜன்னல் கண்ணாடி, கதவுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT