சென்னை: சென்னை கிண்டி அரசினர் ஐடிஐயில், 23-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்து பயன்பெற சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2023-ம் கல்வியாண்டுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. கணினி வெளியீட்டை இயக்குபவர், டிஜிட்டல் புகைப்படக்காரர், உணவு தயாரித்தல் (பொது), உணவு மற்றும் குளிர்பான சேவைக்கான உதவியாளர், ஸ்மார்ட் செல்போன் வல்லுநர் மற்றும் செயலி பரிசோதகர், தொழில்துறை 4.0 திட்டத்தின்கீழ் புதிய படிப்புகளான உற்பத்தி செயல்முறைக்கான கட்டுப்பாடு மற்றும் தானியங்கும் முறை உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த இலவச தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் வரும் 23-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, இலவச வரைபடக் கருவிகள் என பல சலுகைகள் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044 -22501350 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.