மேற்கூரை இன்றி திறந்த வெளியாக உள்ள கழிப்பறை. 
கல்வி

கூரை இல்லாத கழிப்பறை, பழுதான வகுப்பறைகள்: அதிர்ச்சியூட்டும் பிலாக்கோடு அரசு தொடக்கப் பள்ளி

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் பிலாக்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள கழிப்பறையில் மேற்கூரை இல்லை. வகுப்பறைகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பழுதடைந்த வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் அறவே இல்லாதது ஆகியவையே இதற்கு காரணம்.

திங்கள்நகரை அடுத்த நெய்யூர் பக்கம் உள்ள பிலாக்கோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெய்யூர், பிலாக்கோடு, பாதடிகோடு, வெத்துகாட்டுவிளை, திங்கள்நகர், குற்றுப்புளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை மாணவ, மாணவிகள்.

குமரி மாவட்டம் பிலாக்கோடில் பராமரிப்பற்ற நிலையில்
உள்ள அரசு தொடக்கப் பள்ளி.

இப்பள்ளியில் கழிப்பறை மேற்கூரை இன்றி திறந்தவெளியாக உள்ளது. இதனால் குழந்தைகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். வகுப்பறைகளும் பழுதடைந்துகாணப்படுகின்றன. அடிப்படை வசதிகள் அறவே இல்லை. தற்போது இங்கு 32 குழந்தைகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இதனால் மூடப்படும் நிலைக்கு இப்பள்ளி தள்ளப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குமரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் மேசியா கூறியதாவது: நெய்யூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏழை, எளியகுழந்தைகள் பிலாக்கோடு தொடக்கப் பள்ளி மூலம் பயன் பெற்று வருகின்றனர். இங்குள்ள கழிப்பறையை கூட சீரமைக்காததால் மாணவ, மாணவிகள், பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் இப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிலாக்கோடு பள்ளியை சீரமைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

SCROLL FOR NEXT