உலகில் காற்றாலை மின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் சரியான தொழில்நுட்ப ரீதியான நிபுணர்கள் இல்லாத நிலையில், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.
காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், அது தொடர்பான உயர்கல்வி நிறுவனம் இல்லை. இதனால், காற்றாலை திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி உதவி, தொழில்நுட்ப கல்விக்கான உதவி கிடைப்பதில் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் மத்திய அரசின் காற்றாலை தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இதுவரை பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட காற்றாலை என்ற பாடப்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை.
பசுமை மாவட்டமான கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றாலை மூலம் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதைப்போல் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் காற்றாலைகள் நிறைந்துள்ளன.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொடர்பான பாடப்பிரிவுகளுடன் தொழில்நுட்ப கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் தமிழக உயர் கல்வித் தரம் உலக தரத்துக்கு உயரும், பொது இடங்களை மாசுபடுத்தும் ஹைட்ரோ கார்பன் சார்ந்த நிலக்கரி பயன்பாடு குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சமூக பொதுநல இயக்க பொதுச் செயலாளர் சங்கரபாண்டியன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில், “மிகவும் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யவும், உள்நாட்டு தொழில்நுட்பம் வளரவும் காற்றாலை தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவது அவசியம்.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப கல்லூரி அமைப்பதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அதுபற்றி அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.