கோப்புப் படம்
சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கியது. பிரதானத் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், நாளை (ஏப்.6) நடைபெறும் விருப்பப் பாடத் தேர்வுடன் தேர்வுகள் முடிவடைகின்றன.
இந்த நிலையில், விடைத்தாள் திருத்தம் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்கத் தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரியாக சரியாக கணக்கிட்டு உடனே அவர்களை பணியில் இருந்து விடுவித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.
மதிப்பீட்டுப் பணிகளை தாமதமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதற்காக, தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்தும் தகுதியான பாட ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து, தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும். எந்த பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாத வகையில் கண்காணிக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்பும் ஆசிரியர்களுக்கு ஏப்.9-ம் தேதிக்குள் நியமன ஆணையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.