சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.84 லட்சம் மாணவர்கள் எழுதினர். மேலும்,11,411 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், “வினாத்தாளில் 1, 2 மதிப்பெண் பகுதியில் சில கேள்விகள் கடினமாக இருந்தன. இலக்கண பகுதியும் சற்று கடினமாகவே இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரிதாக சிக்கல் இருக்காது. எனினும், அதிக மதிப்பெண் பெற விரும்பிய மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் சற்று ஏமாற்றமாகிவிட்டது. சென்டம் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.
தொடர்ந்து கணிதப் பாடத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மார்ச் 26-ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்வுகள் முடிந்த பிறகு, மாணவர்களின் விடைத்தாள்கள் மார்ச் 28-ம் தேதி மண்டல சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கலக்கி பிரிக்கப்படும். பின்னர், விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 83 முகாம்களுக்கு ஏப்.4-ம் தேதி கொண்டு செல்லப்படும்.
திருத்துதல் பணி ஏப்.8-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.