கல்வி

மாணவர்களிடையே சாதி பிரச்சினைகளை தடுக்க சிறப்பு குழு: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் யோசனை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மாணவர்களிடையே சாதி ரீதியிலான பிரச்சினைகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட புகார்கள் தொடர்பாக திருநெல்வேலியில் நேற்று விசாரணை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்குநேரி சம்பவத்துக்கான காரண த்தை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங் கள் நடைபெறாமல் இருக்க அரசுக்கு பரிந்துரைகளை செய்யவுள்ளோம்.

மாணவர்களுக்கு இடையே சாதிய ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் சூழலை கண்டறிந்து அரசுக்கு ஆலோ சனை சொல்வதற்கு ஏதுவாக, பாதிக்கப் பட்ட மாணவர்களை ஆணையம் சந்திக்க உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் பெற்று அரசுக்கு தெரிவிக்கப்படும். தென் மாவட்டங்களில் இது போன்ற சூழல் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் பரிந்துரைகளை ஆணையம் செய்ய உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பள்ளியிலும் மாணவர்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வருகிறது. அப்பகுதி மக்கள் மாணவர்களிடையே சாதிய வித்தினை விதைக்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து மாணவர்களை கண்காணித்து, சாதி ரீதியிலான மோதல்களை தடுக்க காவல்துறையும், ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களிடையே சாதிய ரீதியிலான பிரச்சினைகளை களைய காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் அந்த பிரச்சினைகளை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சம்பவத்தில் பட்டியலின ஆணையமும், நீதிமன்ற அமைப்புகளும் விசாரணையை தொடங்கியுள்ளது இதன் காரணமாக மாநில மனித உரிமை ஆணையம் தனியாக விசாரணை நடத்த முடியாது.

கந்து வட்டி காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த நபர்கள் மிகமோசமாக நடத்தப்பட்டாலோ மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தால் நிச்சயமாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

நாங்குநேரி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்து அதனை அரசு இயந்திரம் தடுக்க தவறி இருந்தால், அது தொடர்பாக புகார் எழுந்து ஆணையத்தின் கவனத்துக்கு வந்தால் மனித உரிமை ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT