கல்வி

நாங்குநேரி சம்பவம்போல நிகழாமல் இருக்க... - மக்கள் சிவில் உரிமை கழக யோசனைகள்

செய்திப்பிரிவு

மதுரை: நாங்குநேரி சம்பவம்போல நிகழாமல் இருக்க பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவன், அவரது சகோதரி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக (பியுசிஎல்) தேசிய துணைத் தலைவர் ரா.முரளி தலைமையிலான குழுவினர் கள ஆய்வு நடத்தினர்.

இக் குழுவில் மாநிலப் பொதுச் செயலாளர் ஜான்வின்சென்ட், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் சாமு வேல் ஆசீர் ராஜ், மத்திய, மாநில எஸ்சி / எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பின் நெல்லை மாவட்டத் தலைவர் ஊசிக்காட்டான், தலித்திய ஆய்வாளர் ஜெகநாதன், எழுத்தாளர் மதிகண்ணன், தென்காசி சமூகச் செயற்பாட்டாளர் கலீல் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவன் சின்னதுரை, 9-ம் வகுப்பு படிக்கும் அவரது தங்கை சந்திராசெல்வி ஆகியோர் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர். இந்த வழக்கை இபிகோ 326-வது பிரிவின் கீழ் மாற்ற வேண்டும்.

சின்னத்துரை வாழ்க்கைப் பாதிப்புக்குச் சிறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டுகிறோம். சாதி மேலாதிக்க உணர்வு கொண்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாதி மேலாதிக்கச் சிந்தனைகளை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சாதியத் தாக்குதல் நிகழாமல் நல்லிணக்கம் காப்பற்றப்பட வேண்டும். அனைத்து சமூக மாணவர்களும் இணைந்து பழகுகின்ற வகையில் விளையாட்டு, தேசிய சேவை திட்டம், சாரணர் பயிற்சி, தேசிய மாணவர் படை, பசுமைப்படை போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துனர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்து அவர்கள் மூலம் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தர வேண்டும். மாணவர்கள் மத்தியில் சாதி மறுப்பு சிந்தனைகள் வளர்க்கப்படவேண்டும். சாதிய உணர்வுகளை வளர்க்கின்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT