பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறையில் ஒன்று. 
கல்வி

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கழிப்பறை பற்றாக்குறை இருப்பதால் மாணவர்கள் இயற்கை உபா தைக்கு திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்படுவதாக பண்ருட்டியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரித்த போது பெறப்பட்ட தகவல்கள்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி வீதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் மட்டும் பயின்று வருகின்றனர். ஆண்கள் பள்ளி என்றாலும், இப்பகுதியின் தேவை கருதி பிளஸ் -1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இருபால் மாணவர்களும் என சுமார் 1,200 பேர் இப்பள்ளியில் பயில்கின்றனர்.

இந்தப் பள்ளியில் 3 கழிப்பறைகள் உள்ள நிலையில், அதில் ஒன்று ஆசிரி யர்களும், ஏனைய இரு கழிப்பறைகள் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி இடைவேளையின் போது, அனைத்து மாணவர்களும் இரு கழிப்பறைகளை பயன்படுத்த முடியாததால், பள்ளிக்கு வெளியே திறந்த வெளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

அவர்கள் ஒரே ஒரு சிறிய கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தற்போதைய தேவையாக கூடுதல் கழிப்பறை கட்டித் தருவதோடு, உடனடியாக நடமாடும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தால், மழை நாட்களில் பள்ளிச் சுற்றுப்புறத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படாத நிலை உருவாகும் என்று இப்பள்ளி ஆசிரி யர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பள்ளித் தலைமை யாசிரியர் பூவராகமூர்த்தியிடம் கேட்டபோது, “பள்ளியில் போதுமான கழிப்பறைகள் இருந்தன. இப்பள்ளியின் ஒரு பகுதி பெண் கள் மேல்நிலைப் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு கழிப்பறை பற்றாக்குறை உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்துள்ளோம். அண்மையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் கழிப்பறை கட்டப்படும்'' என்றார். 1,200 மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளிக்கு அங்கு இருக்கும் இரு சிறிய கழிப்பறைகள் போதாது, இதில் உடனே நடவடிக்கை எடுப்பது மிக அவசியம்.

SCROLL FOR NEXT