கல்வி

தினமும் 6 கி.மீ நடந்து செல்லும் அவலம் - கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் திருப்பூர் குழந்தைகள்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: நாள்தோறும் 6 கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவலம். மிதிவண்டி, இருசக்கர வாகனங்களில் அன்றாடம் லிப்ட் கேட்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள். காலை, மாலை வேளைகளில் பேருந்து வசதி இல்லாததால் நடந்தே வீடு திரும்பும் நிலை.

இது எங்கோ அடிப்படை வசதியற்ற மலைக்கிராமம் இல்லை. உலகளவில் கவனம் ஈர்க்கும் உழைப்பாளர் நகரமும், ஸ்மார்ட் சிட்டியுமான திருப்பூரில் தான். திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக் குட்பட்ட நெருப்பெரிச்சல், வாவிபாளையம், சேடர்பாளையம், குருவாயூரப்பன் நகர், சமத்துவ புரத்தை சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சுமார் 75 பேருக்கு, அருகே இருப்பது பெருமா நல்லூர், கணக்கம் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் தான்.

அதேசமயம், திருப்பூர் மாநகர் ஜெய்வாபாய் பள்ளிக்கு வருவதென்பது பெரும் சிரமம். இதனால் பலரும் நடந்தே காலை, மாலை வேளைகளில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசுப் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இதில், பலர் காலதாமதமாக பள்ளிக்கு செல்லவே, குழந்தைகளின் நிலையை கண்டு பெற்றோர் வருந்தினர். இதையடுத்து, தனியார் பள்ளிகள்போல அரசுப் பள்ளிக்கு சென்றுவர, ஒவ்வொரு பெற்றோரும் மாதம் தலா ரூ.1000 வாடகையில் தனியார் வேன் வைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக பெற்றோர் கூறும்போது,“அரசுப் பள்ளியில் படிக்க இன்றைக்கு பல்வேறு சலுகைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது. ஆனால், எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர அரசுப்பேருந்து வசதி இல்லை. பல குழந்தைகள் நாள்தோறும் சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். இதில் பலர் களைப்படைந்து, பள்ளிக்கு சென்றாலும், படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படுகிறது.

மாலை நேரங்களில் புத்தகப்பையோடு மாணவர்கள் நடந்து வருவதை பார்க்கும் வாகன ஓட்டிகள் சிலர் லிப்ட் கொடுக்கின்றனர். இருந்த போதிலும் குழந்தைகள் பள்ளி சென்று வரும் வரை பெற்றோர் ஒருவித அச்சத்தை நெஞ்சில் சுமக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. 25 குழந்தைகளின் பெற்றோர் சேர்ந்து, தனியார்வேன் வைத்து பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

எஞ்சிய 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடந்து செல்லும் சூழல்தான் இன்றைக்கும் உள்ளது. மிதி வண்டியில் சென்றாலும் பிரதான சாலை என்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நாள்தோறும் காலை 9 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் திருப்பூர் - வாவிபாளையம் ‘என் 55' என்ற அரசுப் பேருந்து உள்ளது.

அந்த பேருந்தை பெருமாநல்லூர் வரை நீட்டித்தாலே குழந்தைகள் பயன்பெறுவார்கள். பல குழந்தைகளின் பெற்றோர் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கான ஆதாரம் கல்விதான். குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக, உரிய பேருந்து வசதியை செய்துதர மாவட்டஆட்சியர், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு” என்றனர்.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கூறும்போது,“ஏற்கெனவே இதுதொடர்பாக ஆய்வு செய்து, திருப்பூர்-வாவிபாளையம் என்பதை கணக்கம்பாளையம் மற்றும் பெருமாநல்லூர் வரை அரசுப்பேருந்தை இயக்க வேண்டுமென கடிதம் அளித்திருந்தேன். ஆனால், பேருந்துகளை போக்குவரத்து துறை முறையாக இயக்குவதில்லை. இதுதொடர்பாக மீண்டும் திருப்பூர் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

SCROLL FOR NEXT