சென்னை: தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும் என்று முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.
எழுதுக இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108 நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சிசென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு நூல்களை வெளியிட்டு பேசியது: பேனாவை கையில் எடுத்து எழுதத் தொடங்கினாலே செல்போன் பயன்படுத்த நேரமிருக்காது. மேலும், எழுத்து வாசிப்பைத் தூண்டும். வாசிப்பு மொழித்திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கும். எழுதுவதன் மூலம் உற்றுநோக்கும் திறனும், மனிதர்களை வாசிக்கும் திறனும் மேம்படும்.
அதனால் உங்கள் கவனச்சிதறல் முழுவதுமாக அகன்றுவிடும். சமூக அக்கறை கொண்டசான்றோரை உருவாக்கும். ஆங்கிலம் மட்டுமே அறிவல்ல. தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும். அறிவியல், கணிதம் என பல்வேறு துறைகளிலும் சாதிக்க முடியும்.
விரிவாக்கம்: படைப்பாக்கத் திறனை உற்சாகப்படுத்தும்போது உங்களுக்கு தன்னம்பிக்கை வரும். அது உங்களை அடுத்தகட்டத்துக்கு முன்நகர்த்தி செல்லும்.இந்த எழுதுக இயக்கம் அரசுப்பள்ளிகளுடன் நின்றுவிடாமல்கண்ணகி நகர் போன்ற இதர பகுதிகளுக்கும், சிறைச் சாலைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வியக்கம் மாணவர்களிடம் சமூக அக்கறை, நேர்மை,பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும். இவற்றை தாண்டி சாதி, மதப் பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். அதற்கு இந்த எழுத்து உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் பேசும்போது,“மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்போன் தவிர்த்து தினமும் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கனவை நனவாக்க உறுதியுடன் உழைக்க வேண்டும். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்”என்றார்.
இந்நிகழ்வில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர், சிருஷ்டி செயற்கை கருத்தரிப்பு மையத்தின் இயக்குநர் எம்.எஸ்.பிரசாந்தன், குருநானக் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் முஞ்சித் சிங் நய்யார், இளைஞர் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா, எழுதுக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வே.கிள்ளிவளவன், ம.த.சுகுமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.