படங்கள்: ஆர்.வெங்கடேஷ் 
கல்வி

தமிழகத்தில் முதன்முறை: தஞ்சை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம்

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கூட்டுறவு காலனியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மைக்கோசாப்ட் மற்றும் பிளிங்க் அறக்கட்டளை சார்பில் தமிழகத்திலேயே முதன்முறையாக கற்றல் குறைபாடுகள் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம் தொடங்கப்பட்டன.

பள்ளியில் தலைமையாசிரியர் க.கார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். தனியார் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஸ்ரீநாத் வரவேற்றார். மேயர் சண்.ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் இந்திட்டத்தை தொடங்கி வைத்தனர். தனியார் நிறுவன திட்ட மேலாளர் எல்.மகாலட்சுமி கூறியது: “இந்த திட்டம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளியக்கிரஹாரம், புதுப்பட்டிணம், நீலகிரி ஆகிய பகுதிகளிலுள்ள தொடக்கப் பள்ளிகளிலும் விரைவில் இந்தத் திட்டத்தைத் தொடங்கவுள்ளோம்.

இந்தத் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்றல் குறைபாடு சிறப்புப் பயிற்சியும், அவர்களுக்கான ஆங்கில மொழி மேம்பாட்டிற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து, அவர்களை அதிலிருந்து மீட்கவும், அங்குள்ள ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது.

மேலும், 1 மணி நேரத்திற்கு 3 மாணவர்கள் வீதம், சென்னையிலுள்ள பிளிங்க் அறக்கட்டளை சார்பில் ஆன்லைன் வழியாக 3 மாதங்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக பள்ளியில் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட 1 கணினிக்கு 1 வெப் கேமரா, 5 ஹெட் போன்கள் என ரூ.6000 மதிப்புள்ள மென்பொருட்களை, அங்குள்ள ஒவ்வொரு கணினிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியிலிருந்து பொருத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சேலத்தில் இந்த திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT