சென்னை: நீரில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தங்களை அகற்ற மலிவு விலையில் நானோ பொருட்களை கண்டுபிடித்த சென்னை ஐஐடியின் வேதியல் துறை பேராசிரியருக்கு சர்வதேச ‘எனி’ விருது வழங்கப்படவுள்ளது.
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக, உலக அளவில் சிறந்த கவுரவமாக வழங்கப்படும் மதிப்புமிக்க ‘எனி’ விருதை சென்னை ஐஐடியின் வேதியியல் துறை பேராசிரியர் டி.பிரதீப் வென்றுள்ளார். இந்த விருதை இத்தாலி நாட்டின் அதிபர் விரைவில் வழங்கவுள்ளார்.
நீரிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தங்களை அகற்ற நிலையான மற்றும் மலிவு விலையில் நானோ அளவிலான பொருட்களைக் கண்டுபிடித்து பேராசிரியர் பிரதீப் சாதனை படைத்துள்ளார். இதையொட்டி மேம்பட்ட சுற்றுச்சூழல் தீர்வுகளுக்கான பிரிவின்கீழ் ‘எனி’ விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஆராய்ச்சிக்கு உதவிய மாணவர்கள்: இதுகுறித்து பேராசிரியர் பிரதீப் கூறும்போது, “ஆராய்ச்சியை சாத்தியமாக்கிய மாணவர்கள், உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு எனது நன்றி. ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் ஐஐடி கல்வி நிறுவனமும், இந்திய அரசும் வழங்கியது.
நீரானது பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவல்லது. எனவே தேசிய அளவிலும், உலக அளவிலும் அறிவியலுக்காகவும், தொழில்துறை மேம்பாட்டுக்காகவும் நீர்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகும். இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது பணத்தையும், புகழையும் தாண்டி நிம்மதியைத் தருகிறது. நீரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இளைஞர்களைப் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார்.
இத்தாலிய எண்ணெய் நிறுவன விருது: ‘எனி’ விருது இத்தாலிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ‘எனி’ வழங்கும் சர்வதேச விருதாகும். இந்த விருது எரிசக்தி ஆதாரங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்துக்காகவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.