கல்வி

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - உயர்கல்வி அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொறியியல் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், ஜூலை 21-ம் தேதிமுதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சியானது மற்ற கல்லூரிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மருத்துவ கலந்தாய்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி வெளியிடப்படும். அதேபோல, பொறியியல் கலந்தாய்வு தற்போது 4 சுற்றுகளாக நடைபெற்று வரும் நிலையில், அதை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், எந்த பல்கலை.யிலும் அத்தகைய நிலை இல்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அந்தந்த பல்கலைக்கழகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை தேவையான மற்ற கல்லூரிகளுக்கு பணியிட மாறுதல் செய்து வருகிறோம். பல்கலை.யின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல்குழுவில் வழக்கம்போல 3 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெறுவர். ஆளுநர் கூறுவதுபோல 4-வது நபரை சேர்க்க தமிழக அரசு தயாராக இல்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

SCROLL FOR NEXT