ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வெள்ளா மறிச்சுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர்.
பள்ளிக்குச் செல்ல 8.கி.மீ. தூரம் நடந்து செல்வதால் பேருந்து வசதியும், கிராமத்துக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் முகா மில் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மாணவி ஜெய தர்ஷினி கூறும்போது, எங்கள் கிராமத்தில் தொடக்கக் கல்வியை முடித்து 6 முதல் பிளஸ் 2 வரை படிக்க 4 கி.மீ தொலைவில் உள்ள திருஉத்தரகோசமங்கை அரசுப் பள்ளிக்கு 30 மாணவ, மாணவிகள் செல்கிறோம். பள்ளிக்குச் சென்று திரும்ப பேருந்து வசதியில்லை. தினமும் 4 கி.மீ தூரம் நடந்தே சென்று வீடு திரும்புகிறோம்.
அதனால் 8 கி.மீ தூரம் நடக்கும் நிலை ஏற்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியாக இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, திருஉத்தரகோசமங்கை அரசுப் பள்ளிக்குச் செல்ல காலை, மாலை நேரங்களில் பேருந்து இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கிராமத்தைச் சேர்ந்த சித்தரை வேல் கூறியதாவது: காலை 7.30 மணிக்கு மட்டும் ராமநாதபுரத்திலிருந்து ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதுவும் வெள்ளா மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்து ராமநாதபுரத்துக்கு திரும்பிவிடும். திருஉத்தரகோச மங்கைக்கு எந்தப் பேருந்து வசதியும் இல்லை.
மாணவர்கள் தினமும்புத்தக பையுடன் 4 கி.மீ நடந்து பள்ளி சென்று திரும்புவதால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. கிராமத்தில் குடிநீர் வசதியில்லை. காவிரிக் குடிநீரும் வருவதில்லை. கிணற்றில் இருந்து கலங்கலான நீரை எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதியும், கிராமத்துக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.