மதுரை: கல்வி என்பது அகிம்சை அடிப்படையில் இருக்க வேண்டும், அப்போதுதான் உலக அமைதி சாத்தியமாகும் என ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத்தின் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் ‘கல்வி தத்துவம்- உலகியல் பார்வை’ எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு இதற்கு நடைபெற்றது. இதற்கு காந்தி அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் ஆர்.தேவதாஸ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக, ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத்தின் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப் பங்கேற்று பேசுகையில், "கல்வி என்பது அகிம்சை அடிப்படையில் இருக்க வேண்டும். அப்போதுதான் உலக அமைதி சாத்தியமாகும். மேலும் மகாத்மா காந்தி வலியுறுத்திய கல்விக் கொள்கை இன்றைய மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இது தனிமனித அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதிக்கு சாத்தியமாக இருக்கும்" என்றார்.
முடிவில், பேராசிரியை வளர்மதி நன்றி கூறினார். இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.