சென்னை: தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் கோயம்புத்தூர், பர்கூர், சேலம், திருநெல்வேலி, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரிகள், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர (4 ஆண்டு) பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது இணைய வழியில் தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://ptbe-tnea.com எனும் இணையதளம் வழியாக ஜூலை 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவைஉதவி மையங்களுக்கு (டிஎஃப்சி)சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை ஜூலை 24 முதல் 27-ம்தேதி வரை நடைபெறும்.
சான்றிதழ் பதிவேற்றம்: விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் ஜூலை 28-ம் தேதி தெரிவிக்கப்படும். அதில் குறைபாடு இருந்தால் ஜூலை 29, 30-ம் தேதிகளில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். தரவரிசை பட்டியல் ஆக.5-ம் தேதி வெளியிடப்படும். இணைய வழியில் அன்றைய தினமே கலந்தாய்வு தொடங்கி ஆக.10-ம் தேதி வரை நடத்தப்படும்.
விண்ணப்பங்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள், விண்ணப்ப கட்டணம், கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். 0422-2590080, 9486977757 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.