கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 
கல்வி

கடையநல்லூர் அரசு கல்லூரியில் 27 விரிவுரையாளர் பணியிடங்கள் காலி - மாணவர்களின் கல்வித் தரம் என்னாவது?

செய்திப்பிரிவு

தென்காசி: கடையநல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக இருந்தது. தற்போது அரசு கல்லூரியாக தரம் உயர்ந்தது.

இங்கு 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவ, மாணவிகள் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றனர். மேலும், விரிவுரையாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கருதி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

கல்லூரியில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மாணவர் சுரேஷ் என்பவர் மனு அனுப்பியுள்ளார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் 61 விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டிய இக்கல்லூரியில், வெறும் 34 பேர் மட்டுமே பணிபுரிவதாகவும், அவர்களில் ஒருவர் மட்டுமே நிரந்தர பணியில் இருப்பவர் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. மற்ற 33 பேரும் பகுதி நேரமாக பணிபுரியும் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் ஆவர்.

கல்லூரி முதல்வர் பணியிடமும் காலியாக உள்ளது.

தமிழ் பாடத்துக்கு மட்டும் ஓரளவு விரிவுரையாளர்கள் உள்ளனர். 8 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 7 பேர் பணிபுரிகின்றனர். ஆங்கில பாடத்துக்கு 14 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர். 10 காலிப் பணியிடங்கள் உள்ளன.

மேலும், வணிகவியல் பாடத்துக்கு 3, கணினி அறிவியல் பாடத்துக்கு 7, கணித பாடத்துக்கு 4, தமிழ் பாடத்துக்கு ஒன்று, ஒரு நூலகர் பணியிடம் என மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியப் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் அதிக அளவில் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடையநல்லூர் அரசு கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்வழியில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளியில் ஆங்கில புலமையை பெற்றுவிடுவதில்லை. கல்லூரியில் சேர்ந்த பின்னரே ஆங்கில புலமையை பெறுகின்றனர். ஆனால் கடையநல்லூரி அரசு கல்லூரியில் ஆங்கில பாடத்துக்கு அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளன.

இதேபோல், கணினி அறிவியலில் தேவை அதிகரித்து வருகிறது. அந்த பாடத்துக்கும் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன. புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளதால் காலி பணியிடங்களை உடனடியாக நிரம்ப வேண்டும் என்று மாணவ, மாணவிகளும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT