வந்தவாசி அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தில் தரமற்று கட்டப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், பள்ளி கட்டிடத்தை நேற்று ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தி. 
கல்வி

வந்தவாசி | தரமற்று கட்டப்படும் பள்ளி வகுப்பறை - கிராம மக்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தில் தரமற்று கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எய்ப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, ரூ.28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால், அதே கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிகமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய கட்டிடம், தரமற்று கட்டப்படுவதாக குற்றஞ்சாட்டிய கிராம மக்கள் நேற்று பள்ளி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, "தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பள்ளி கட்டிடம் கட்டப்படுகிறது. கைகளால் சுரண்டினாலே, செங்கல்லுக்கு இடையே உள்ள சிமென்ட் கலவை கொட்டுகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரையும் சரியாக போடவில்லை. மேற்கூரையை தாங்குவதற்காக, குறுக்கே அமைக்கப்பட்ட தூண் வளைந்துவிட்டது. இதனால் மேற்கூரையும் வலுவிழுந்து,

தூண் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. தரமற்று கட்டப்படும் பள்ளி கட்டிடத்தை நம்பி, எங்களது பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்ப முடியும். வலுவிழந்த மேற்கூரையை அகற்றிவிட்டு புதிய மேற்கூரை அமைக்க வேண்டும்” என்றனர்.

இந்த தகவலறிந்த வந்தவாசி ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற் பொறியாளர் ஆனந்தி பள்ளிக்கு விரைந்து சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சரி யாக அமைக்காத தூண் மற்றும் மேற்கூரையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என உதவி பொறியாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT