ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், 380 மாணவர்கள் படிக்கும் நிலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்துக்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறையின், பழங் குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 380 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மலைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி என்பதால் தொடக்கக் காலம் முதல் இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.
தற்போது, இப்பள்ளியில், 11 வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், 380 மாணவர்களுக்கும், ஒரு தமிழாசிரியர் மற்றும் ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியைப் பொறுத்தவரை, 10 ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 5 பணியிடங்களும் உருவாக்கப் படவில்லை. மேலும், தற்போது வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கும் பள்ளி மாற்றப் படவில்லை.
இது குறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்தப்படும் 320 பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாதது தொடர்ந்து வருகிறது.
இதில், ஈரோடு மாவட்டம் பர்கூர் பள்ளியும் ஒன்றாகும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது.
ஆனால், அந்த அறிவிப்பு இதுவரை செயலாக்கத்துக்கு வரவில்லை. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, தரமான கல்வி அளித்தால் மட்டுமே, உயர்கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அவர் களுக்கான பங்கை பெற முடியும். எனவே, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, போதுமான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும், என்றார்.
இன்று உண்ணாவிரதம்: இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (23-ம் தேதி) பர்கூரில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.