கல்வி

காளையார்கோவில் அருகே பாதை இல்லாத பள்ளி - அச்சத்துடன் செல்லும் மாணவர்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பள்ளிக்கு பாதை இல்லாததால், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

பெரிய கண்ணனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய இடம் இல்லாததால், ஒரு கி.மீ. தூரத்தில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி 10 ஆண்டுகளாகியும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டவில்லை. மேலும் இப்பள்ளிக்குச் செல்ல பாதை இல்லாததால் 1 கி.மீ.க்கு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் மாணவர்கள் சென்று வருகின்றனர்.

மழைக் காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விடுவதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்போது பள்ளியில் வரும் குடிநீரில் மண் கலந்து வருகிறது. பள்ளிக்கு மின் கம்பங்கள் ஊன்றாமல், தற்காலிக கம்பிகளை ஊன்றி மின் இணைப்பு கொடுத்துள்ளனர். அப்பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இது குறித்து பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருமாறன் கூறுகையில், பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மின் இணைப்புக்காக ஊன்றப்பட்ட தற்காலிக கம்பி சமீபத்தில் மழையில் சாய்ந்தது. மீண்டும் ஊன்றி வைத்துள்ளோம். பாதை இல்லாததால் மாணவர்கள் சென்றுவர சிரமப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT