சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23-ம் ஆண்டில் திரட்டியுள்ளது.
சென்னை ஐஐடியின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியர்களை (Chair Professorship) நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.
நிதி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த சென்னை ஐஐடியின் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, "சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள், தங்களுக்குப் பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் நெகிழச் செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸ்-ஐ இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.
சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 40 புதிய நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் கைகோர்த்துள்ளன. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் வாயிலாக எரிசக்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சிகளிலும் நன்கொடையாளர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
சென்னை ஐஐடி நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக 'இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட்' அலுவலகத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு குழு தொழில்ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினர் கார்ப்பரேட் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஆண்டுகளில், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், இக்கல்வி நிறுவனம் நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இக்கல்வி நிறுவனத்தின் சமூகம் சார்ந்த திட்டங்கள் எவ்வாறு நாட்டுக்குப் பயனளிக்கின்றன என்பது குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் 'இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட்' அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர், "முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கூட்டுமுயற்சியின் வாயிலாக இக்கல்வி நிறுவனத்திற்கு நீடித்த சொத்துகளை உருவாக்க 'இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட்' அலுவலகம் உதவி புரிந்து வருகிறது.
சுகாதாரம், காலநிலை மாற்றம், ஆற்றல், திறன் மேம்பாடு, விவசாயம் போன்ற சமூகம் தொடர்பான துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், வரிசைப்படுத்தவும் கவனம் செலுத்தும் வகையில் எங்களது பயனர்கள் பல்துறைசார் சிறப்பு மையங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகின்றனர். உதவித்தொகை மற்றும் ஃபெல்லோஷிப் மூலம் மாணவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியையும் வழங்குகின்றனர்.
தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், தொழில்துறை நெட்வொர்க்குகள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றில் முன்னாள் மாணவர்கள் ஆதரவை அளிக்கலாம். இந்த வளாகத்தின் புத்தாக்க மையங்களுக்கான கட்டுமானப் பணிகள், உள்விளையாட்டு மையங்கள், வளாக போக்குவரத்துக்கு மின்சாரப் பேருந்துகள் என ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்தும் பணியிலும் ஆதரவளிக்கலாம்.
சென்னை ஐஐடி உடன் தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முன்னாள் மாணவர்களுடன் பரந்த அளவில் பணியாற்றி வருகிறோம். இந்த நேரத்தில், எங்களுக்கு ஆதரவு அளிப்போர் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் இக்கல்வி நிறுவனம் வலுவான கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளும் என்பது உறுதி" என தெரிவித்தார்.
"கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் தூய்மைப் பணி, ஆற்றல், சுற்றுச்சூழல், வேளாண்மை, நிலையான வீடுகள் உள்பட பல்வேறு சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் 94 ஆசிரிய உறுப்பினர்களின் திட்டங்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டிற்கான இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிதி திரட்டும் இலக்குகளாக, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னாள் மாணவர்களிடையே நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.