கடலூர்: ‘நகர்ப்புற மாணவர்கள் பெறுகின்ற கற்றல், கற்பித்தல் சூழ்நிலையை கிராமப்புற மாணவர்களும் பெற வேண்டும்’ - இந்த ஆசை, கல்வி சார்ந்த செயல்பாட்டில் உள்ள அனைவருக்கும் உண்டு. வெகு சில இடங்களிலேயே அந்தக் கனவு நனவாகும் முயற்சி நடக்கிறது. அப்படியான முயற்சியில் முத்தாய்ப்பாய் உள்ள பள்ளி ஒன்று கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் இருக்கிறது.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு செயல்பட்ட இந்த தொடக்கப் பள்ளியின் கற்பிக்கும் முறையைக் கண்டு, பெற்றோர் ஆர்வமுடன் மாணவர்களைச் சேர்க்க, தற்போது 223 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
சிசிடிவி கேமரா, சுகாதாரமான பள்ளி வளாகம், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை குளிர் சாதன வசதியுடன் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ உள்ளிட்ட வசதிகளுடன் இப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக அந்தோணி ஜோசப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் சாந்தி மேரி, புஷ்பலதா, ஆரோக்கியதாஸ், லயோனா, கீதா என 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்குள் ஒருங் கிணைந்து, இளம் சிறார்களுக்கான கற்றல் செயல்பாடுகளை எளிய முறையில் செயல்படுத்துவதை நாம் பார்த்த போது, ‘நல்ல முயற்சி’ என்றே பாராட்டத் தோன்றியது.
காலை நேர வழிபாட்டில் சிறிய நன்னெறிக் கதை ஒன்றைக் கூறி, அன்றைய தினத்தை தொடங்குகின்றனர். வழிபாடு முடிந்ததும் சற்று தாமதமாக வந்த ஒரு மாணவனை அழைத்து, அதற்கான உரிய காரணத்தை கேட்டு, பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.
இந்தப் பள்ளியின் தொடர்ச்சியான நல்ல செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருதும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் புதுமைப் பள்ளிக்கான விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளியின் தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப்புக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் ‘மாணவர் மனசு’ என்ற பெட்டி, ‘மாணவர்களின் புகார் பெட்டி’, ‘நேர்மை பெட்டி’ என 3 பெட்டிகளை வைத்துள்ளனர். அதுபற்றி கேட்டதற்கு, “மாணவர்கள் தங்களின் நிறைகுறைகளை அதில் எழுதி போடலாம்; தங்களின் விருப்பங்களை தெரிவிக்கலாம். எந்த ஒரு பொருளோ அல்லது பணமோ கீழே கிடந்தால், அதை மாணவர்கள் ‘நேர்மை பெட்டி’யில் போட்டு விடுமாறு வலியுறுத்துகிறோம்” என்கின்றனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
‘தொடக்கப் பள்ளி மாணவர்கள், இந்த முறையை எந்த அளவுக்கு உள்வாங்கி செயல்படுத்துவார்கள்?’ என்று கேட்டதற்கு, மாணவர்கள், ‘புகார் பெட்டி’ மற்றும் ‘மாணவர் மனசு பெட்டி’யில் பதிவிட்ட கருத்துகளை நம்மிடம் ஆசிரியர்கள் காட்டினர். 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள், அவர்கள் அளவில், அவர்களின் விருப்பங்களை, குறைகளை அவர்கள் மொழி நடையில் கூறியிருந்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப்பிடம் பேசினோம்.
“கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக உயர்த்திட எங்களால் இயன்றதை தொடர்ந்து செய்கிறோம். தமிழக அரசால் கடந்தாண்டு தொடங்கப்பட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தற்போது சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இன்னும் நிறைவாக அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் எங்கள் பள்ளிக்கான அனைத்தையும் செய்ய ஆசை. ஊராட்சி ஒன்றிய அளவில் அதற்கான சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது” என்கிறார் தலைமையாசிரியர்.