பல்லாவரம்: செங்கை மாவட்டம், பல்லாவரம் தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அரசு தொடக்கப் பள்ளிக்குவருகை புரிந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு சாக்லேட் மலர்கள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியில் குடிநீர், கழிப்பறை, பழைய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி, ஆசிரியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்லாவரம் நகராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இந்த தொடக்கப் பள்ளிதான் காரணம். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பள்ளி தொடங்கிய நாள் முதல் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இப்பள்ளி சார்பில் மேஜை, நாற்காலி வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக நிவர்த்தி செய்து தர பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பள்ளி கல்விக்கு நிறைய நிதிகளை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.