பள்ளிக்கு வந்த உற்சாகத்தில் விரலை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுவன். படங்கள்: எஸ்.சத்தியசீலன் 
கல்வி

1 முதல் 5 வரை வகுப்புகள் தொடங்கியது: இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை நேற்று வகுப்புகள் தொடங்கின. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் வரவேற்றனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை கடந்த ஜூன் 7-ம் தேதிதிறக்க பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டிருந்தது. வெயிலின் தாக்கம்அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 12-ம் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவ,
மாணவிகளை ஆசிரியர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி
வரவேற்றனர். படம்: எம்.முத்துகணேஷ்

இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு நேற்றுமுதல் வகுப்புகள் தொடங்கின. மாணவ, மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்துவிட்டுச் சென்றனர். அப்போது, பள்ளிக்கு போக மாட்டேன் என அடம்பிடித்த மழலையர் வகுப்பு குழந்தைகளை பெற்றோர் சமாதானப்படுத்தி, பள்ளிகளில் விட்டுச்சென்றனர்.

வகுப்பறைக்கு செல்ல மறுத்து அழும் சிறுவன்.

சில பள்ளிகளில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களைபோல வேடம் அணிந்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒருசில பள்ளிகளில் குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று
பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை கொளத்தூர், ஜெயகோபால் கரோடியா பள்ளிக்கு
வந்த மழலைகள் ஆசிரியர்களின் மடியில் ​​அமர்ந்தவாறு நெல் மணியில்
தமிழ் எழுத்துகளை எழுதினர்.

அழுதுகொண்டிருந்த குழந்தைகளை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி, வகுப்பறையில் அமர வைத்தனர். சில பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடநூல்கள், நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT