கல்வி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - புதுச்சேரி பள்ளிகளில் 2 வேளை வாட்டர் பெல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவை பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக ‘வாட்டர் பெல்' அடிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாணவர்கள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தினமும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக ‘வாட்டர் பெல்' திட்டம் முன்பு நடைமுறையில் இருந்தது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: காலையில் பள்ளி தொடங்கியவுடன் குழந்தைகள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். கழிவறைகளை சுகாதார முறையில் பயன்படுத்தவும் கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் தண்ணீர் பருகுவதற்கு ஏதுவாக தினமும் 2 வேளை ‘வாட்டர் பெல்' அடிக்க வேண்டும்.

காலை 10.30 முதல் 11.45 மணிக்குள்ளும், மதியம் 2.30 மணிக்கும் இந்த ‘வாட்டர் பெல்' அடிக்கவேண்டும். தண்ணீர் தேவையான அளவு அருந்த கற்றுத்தர வேண்டும். கட்டாயப்படுத்தக் கூடாது. அனைத்து பள்ளிகளிலும் பாதுப்பான குடிநீர் வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் உள்ள இடத்தையும், கழிவறையையும் சுகாதாரமாக பராமரிப்பது அவசியம்.

குழந்தைகள் பள்ளிக்கு பாட்டிலில் குடிநீர் எடுத்துவந்தால் வீட்டுக்கு செல்லும்போது முழுவதும் குடித்து காலியாகஎடுத்து செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக 2 வேளை ‘வாட்டர் பெல்' அடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT