கல்வி

ஐஐடி ஆன்லைன் படிப்பு குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரிப்பு - சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஐஐடி ஆன்லைன் படிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்துள்ளார்.

தேசிய தரவரிசை பட்டியலில் ஒட்டுமொத்த செயல்பாட்டு பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், ஐஐடி-க்கு கிடைத்துள்ள தேசிய அளவிலான அங்கீகாரம் குறித்து அதன் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. சென்னை ஐஐடி ஒட்டுமொத்த செயல்பாடு பிரிவில் 5-வது முறையாகவும், பொறியியல் பிரிவில் 8-வது முறையாகவும் முதலிடத்தைப் பிடித்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மத்திய அரசு, தமிழக அரசு எனஅனைத்து தரப்பினரின் பெருமுயற்சிகளும், தொடர் ஒத்துழைப்பும், பங்களிப்பும் காரணம். தேசிய தரவரிசையில் 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்துள்ளனர்.

தேசிய தரவரிசை அங்கீகாரம் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அளவுகோலாகவும் அமைந்திருக்கிறது. ஐஐடி சரியான இலக்கில் செல்கிறது என்பதற்கு இந்த அங்கீகாரம் ஒரு அடையாளம். இதே உற்சாகத்தோடு தொடர்ந்து செயல்பட்டு அடுத்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்வோம்.

ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் என 2 ஆன்லைன் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத்தேர்வு அவசியமில்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். பிஎஸ் டேட்டா சயின்ஸ் ஆன்லைன் படிப்பு பற்றி தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில்கூட இந்த ஆன்லைன் படிப்பு குறித்து பேசுவதை நாங்கள் நேரில் பார்த்தோம். உயர்தர கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படிப்புகளை அறிமுகப்படுத்தினோம்.

ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும் வகையிலும் மனஅழுத்தங்களை போக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

பொறியியல் பாடப்பிரிவுகளை பொருத்தவரையில் எந்த படிப்பை படித்தாலும் சிறப்பாக படித்தால் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. வரும் காலங்களில் பொறியியலில் வெவ்வேறு பாடங்களை ஒருங்கிணைந்து படித்தால்தான் வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகும். தான்சானியா நாட்டுடன் இணைந்து அங்கு விரைவில் ஐஐடி கல்வி நிறுவனத்தை தொடங்க முடிவுசெய்துள்ளோம்.

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கு ஐஐடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் விளைவாக ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தாக்க தொழில்கள் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்தியா வல்லரசாக மாற வேண்டுமானால் அதிகப்படியான தொழில்முனைவோர் உருவாக வேண்டும்.

ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது எந்தவிதமான சாதி பாகுபாடும் பார்க்கப்படுவது கிடையாது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பின்னடைவு காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன. இவ்வாறு காமகோடி கூறினார்.

SCROLL FOR NEXT