கரூர்: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ரூ.6.90 கோடியில் மாவட்ட மைய நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கரூர் மாவட்ட மைய நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் கரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
அதன்பின், மேலும் 2 தளங்கள் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு நாளிதழ், பருவ இதழ்கள் பிரிவு, நூல்கள் வழங்கும் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி பிரிவு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் குறிப்புதவி பிரிவு (ரெபரன்ஸ்), பெண்கள், குழந்தைகளுக்கான ஆகியவை செயல்பட்டு வருகின்றன. 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களும், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களும் உள்ளனர். நாள்தோறும் சுமார் 500 வாசகர்கள் வருகை தருகின்றனர்.
நூல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுதல் உள்ளிட்ட காரணங்களால் தற்போதைய மாவட்ட மைய நூலகத்துக்கான இடம் போதுமானதாக இல்லை. இதற்காக நூலகக் கட்டிடத்தை விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. இதே இடத்தில் நூலகக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கான போதுமான இட வசதி இல்லாததால், மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தின் மேற்குப் பகுதியில் ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலக கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நாளிதழ், பருவ இதழ்கள், பெண்கள், குழந்தைகள் பிரிவு, புத்தகங்கள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கட்டிடத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பிரிவு, மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் ஆகியவை தொடர்ந்து செயல்படும்.
இதுகுறித்து நூலகத் துறையில் கேட்டபோது, புதிய கட்டிடத்துக்காக முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிர்வாக அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
- க.ராதாகிருஷ்ணன்