கல்வி

போதிய கழிப்பறை வசதியின்றி சிரமப்படும் விருதுநகர் அரசு ஐடிஐ மாணவர்கள்

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அரசு ஐடிஐயில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் சூலக்கரையில் அரசு ஐடிஐ இயங்கி வருகிறது. இங்கு பிட்டர், பிளம்பர், இயந்திரவியல், வெல்டர், பயர் அண்ட் சேஃப்டி, ஆட்டோமொபைல், ஏசி மெக்கானிக் போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், 3 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதிலும், பல நாட்கள் தண்ணீர் வருவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், அரசு ஐடிஐயில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் 3 கழிப்பறைகளுக்கும் போதிய தண்ணீர் வசதி இல்லை. இதனால், திறந்த வெளியிலும், காட்டுப் பகுதிக்கும் செல்ல வேண்டியுள்ளது. திறந்த வெளியில் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்றுவர வேண்டியுள்ளது.

எனவே, ஐடிஐ வளாகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும். தேவையான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து அரசு ஐடிஐ அலுவலர்கள் கூறுகையில், கூடுதல் கழிப்பறை கட்டுவதற்கு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தில்கூட கழிப்பறை கட்டுமானங்களை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில், கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படும் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT