கல்வி

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகளில் சந்தேகம் இருந்தால், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய கணிசமான மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களது விடைத்தாள் நகல் மே 30-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் சில மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாணவரின் விடைத்தாளில் மொத்தம் 66 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு முடிவில் அவரது மதிப்பெண் 69 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு மாணவரின் விடைத்தாளில் 80 மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவில் 76என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற் படுத்தியது.

கணினியில் மதிப்பெண்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட குளறுபடிகளே இதற்கு காரணம். விடைத்தாள் திருத்துவதை சரிபார்ப்பதுபோல, மதிப்பெண்களை ஆசிரியர்கள் கணினியில் பதிவு செய்வதையும் தேர்வுத் துறை சரிபார்க்க வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாணவர்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால், அதன்மீது ஆய்வு செய்து, மதிப்பெண்ணில் உரிய திருத்தம் செய்து தரப்படும். கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT