திருவாரூர்: முத்துப்பேட்டையில் இருவேறு நிகழ்வுகளில் 2 இஸ்லாமிய பெண்களை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்ற இளைஞர்களை தாக்கிய 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(24). இவர் நேற்று முன்தினம் முத்துப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வழியில் எடையூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது உறவுப் பெண்ணின் தோழியான ஜின்னத் பென்சியா என்பவருக்கு லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்றார்.
முத்துப்பேட்டை ரஹமத் பள்ளி அருகே சென்றபோது அவரை வழிமறித்த 5 பேர், அந்தப் பெண்ணை ஏன் நீ அழைத்துச் செல்கிறாய் எனக் கேட்டு, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் முகமது(39), முத்துப்பேட்டை ரியாஸ் அகமது (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும், பெரோஸ்கான், அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி, ரியாஸ் அகமது ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதேபோல, முத்துப்பேட்டையை அடுத்த அத்திவெட்டியை சேர்ந்த முகேஸ்வரன்(25) என்பவர் தனது சகோதரியை பார்க்க வீட்டுக்கு வந்திருந்த ஷகிலா பானு என்பவரை அவரது வீட்டில் விடுவதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது, முத்துப்பேட்டை பகுதியில் அவரை வழிமறித்த 5 பேர், முகேஸ்வரனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக முகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துப்பேட்டையை சேர்ந்த அகமது ஜூனைல்(25), முகமது அசிம்(25), பெரோஸ்கான்(24) ஆகியோரை கைது செய்தனர். அகமது சுல்தான், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.