புதுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலகலங்குடியைச் சேர்ந்தவர் க.அஜித்குமார்(30). இவரும், அதே மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்த காவியா என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், காவியாவுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது தெரியவந்ததால், அஜித்குமார், நவ.27-ம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை வழிமறித்து கொலை செய்தார்.
இந்தவழக்கில் அம்மாப்பேட்டை போலீஸார் அஜித்குமாரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை சிறையில் இருந்த அஜித்குமார் நேற்று வேட்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த சிறைக் காவலர்கள் அஜித்குமாரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.