தென்காசி: ஆலங்குளம் அருகே கள் இறக்கியதை கண்டித்ததால், காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் பனை மரத்தில் இருந்து சட்டவிரோதமாக கள் இறக்குவதாக போலீஸாருக்குதகவல் கிடைத்ததால் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா நேற்று காலை அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, பனை மரத்தில் இருந்து இறங்கிய மருதம்புத்தூர் மேலத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரிடம், உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தினார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், இசக்கிராஜா தற்காப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மணிகண்டனை காலில் சுட்டுள்ளார். இது குறித்த தகவலின்பேரில், ஏடிஎஸ்பி சங்கர், காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீஸார் விரைந்து வந்து, இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மருத்துவமனைக்குச் சென்று, உதவி ஆய்வாளரிடம் நலம் விசாரித்து, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.