நரேஷ்குமார்
கடலூர்: நெய்வேலி இந்திரா நகர் பி2 பிளாக் மாற்று குடியிருப்பில் வசிப்பவர் அமிர்தலிங்கம் மகன் ஆனந்தராஜ் (36). இவருக்கும், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது.
நேற்று ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் நெய் வேலி வட்டம் 2-ல் உள்ள அரசு மதுபானக்கடை பின்புறம் உள்ள சுடுகாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். இதையறிந்த கோபி தனது நண்பர்கள் 20 பேருடன் 3 கார்களில் அங்கு சென்றனர். இதை எதிர்பாராத ஆனந்தராஜ் தரப்பினர் தப்பியோட முயற்சித்தனர்.
அப்போது கோபி தரப்பினர் ஆயுதங்களால் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பரான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) ஆகிய இருவரையும் சராமரியாக வெட்டினர். இதில் நரேஷ்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த நெய்வேலி நகர போலீஸார் நரேஷ்குமார் உடலை கைப்பற்றி நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஆனந்தராஜ், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். தகவலறிந்த ஆனந்த ராஜ் மற்றும் நரேஷ்குமாரின் உறவினர்கள் என்எல்சி பொது மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
மேலும் நரேஷ்குமாரை வெட்டிக்கொலை செய்த நபர் களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), ராமகிருஷ் ணன் (37) ஆகியோர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 10-ம் தேதி கடலூர் அருகே ரங்கா ரெட்டிப்பாளை யத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக புதுவை உறுவையாறைச் சேர்ந்த சசிகுமார் (31) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
நேற்று நெய்வேலியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ்குமார் (26) கொலை செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களில் 4 கொலைகள் நடந்திருப்பது பொதுமக் களிடையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.