ரஞ்சன்
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சன்(18).
நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் அழைத்ததாகக் கூறி வெளியே சென்றவர் நள்ளிரவாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் ரஞ்சனை தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை சாணாபுத்தூர் பகுதியில் மயானத்தில் சமாதி ஒன்றின் மீது ரஞ்சன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பாதிரிவேடு போலீஸார், ரஞ்சனின் உடலைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப் பதிந்து சாணாபுத்தூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, ரஞ்சனின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த காமேஷ்(21) என்பவரை நேற்று மாலை கைது செய்தனர்.
காமேஷிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: காமேஷும், ரஞ்சனும் சாணாபுத்தூர் மயானத்தில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்தபோதும் காமேஷின் மனைவி குறித்து ரஞ்சன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் ரஞ்சனை காமேஷ், கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார் என்று போலீஸார் கூறினர்.