விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இளைஞர் ஒருவர், மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறை தரப்பு வெளியிட்ட தகவல்கள்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேந்தனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் தற்போது மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆகாஷ் நேற்றிரவு தனது சொந்த ஊருக்கு வந்துவிட்ட இன்று காலை திருச்சுழி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திருச்சுழி - பனையூர் செல்லும் சாலை இடையே மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், திடீரென வழிமறித்து ஆகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் உயிரிழந்தார். மேலும், மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்சுழி டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான போலீஸார், ஆகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும், திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.