கேசவன்

 
க்ரைம்

பள்ளிக்கரணையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு

மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை

பெ.ஜேம்ஸ் குமார்

சென்னை: பள்ளிக்கரணையில் வீட்டின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை வீராசாமி தெருவில் ஐஸ்வர்யா என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (49), கேசவன் (29) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் ராஜேஷ் தொட்டிக்குள் விழுந்தார். இதைக் கண்ட கேசவன், அவரைக் காப்பாற்றுவதற்காகத் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால், அவரையும் விஷவாயு தாக்கியதால் இருவரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டனர். இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயக்க நிலையில் மீட்கப்பட்ட ராஜேஷ், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பள்ளிக்கரணை போலீஸார், கேசவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுங்கையூரில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு:

இதேபோல், சென்னை கொடுங்கையூர் பகுதியில் நேற்று 12-ம் தேதி மழைநீர் வடிகால் தொட்டியில் பழுதான மின்மோட்டாரைச் சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 20 அடி ஆழமுள்ள தொட்டிக்குள் இறங்கிய நவீன்குமார் (34), அஸ்மத் பாஷா (38) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ஒருவர் தொட்டிக்குள் இறங்கியபோது ஆபத்தில் சிக்கிய நிலையில், அவரைக் காப்பாற்ற மற்றொருவரும் உள்ளே இறங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. இருவரும் உயிரிழந்ததையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் விஷவாயு தாக்கியதா அல்லது மூச்சுத்திணறல் உள்ளிட்ட வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம்:

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் மூடப்பட்ட வடிகால் அமைப்புகளுக்குள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு உள்ளிட்ட ஆபத்தான வாயுக்கள் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்பு வாயு அளவைப் பரிசோதிப்பது, போதிய காற்றோட்டத்தை உறுதி செய்வது, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற நடைமுறைகள் அவசியம்.

குறிப்பாக, தொட்டிக்குள் ஒருவர் மயங்கி விழுந்தால், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அவரைக் காப்பாற்ற மற்றொருவர் உள்ளே இறங்குவதும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். பள்ளிக்கரணையில் காப்பாற்றச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் இதன் ஆபத்தை உணர்த்துகிறது.

சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த உயிரிழப்புகள், கழிவுநீர் தொட்டி மற்றும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT