க்ரைம்

சென்னை: காதலிக்கு செலவு செய்ய திருடிய இளைஞர் கைது - வளர்ப்புத் தந்தை வீட்டில் கைவரிசை

நகைகளை விற்க உதவிய பெண்ணும் சிறையில் அடைப்பு

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: காதலிக்கு செலவு செய்வதற்காக மகனாக வளர்த்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். நகைகளை விற்பனை செய்ய உதவிய பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் செல்வம் (60), வளசரவாக்கம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த க.செல்வம் (20) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு முதல் தத்தெடுத்து, சொந்த மகனைப் போல் வளர்த்து வந்துள்ளார்.

அவரை சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்ததுடன், மளிகைக் கடையிலும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். கடந்த 17-ம் தேதி வீட்டில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகளை செல்வம் சரிபார்த்தபோது, சுமார் 21 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வத்தின் வளர்ப்பு மகனான க.செல்வம், வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், க.செல்வம் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அவருக்காக செலவு செய்வதற்கு பணம் தேவைப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தன்னை வளர்த்த செல்வத்தின் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி, மளிகைக்கடைக்கு எதிரே ஜூஸ் கடை நடத்தி வந்த மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்த தீபிகா (29) என்பவரிடம் கொடுத்துள்ளார். தீபிகா அந்த நகைகளை விற்று பணமாக்கியதாகவும், பின்னர் கிடைத்த பணத்தை இருவரும் பங்கிட்டு செலவு செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, நகைகளை திருடியதாக க.செல்வம் (20) மற்றும் அவற்றை விற்று பணமாக்கியதாக தீபிகா (29) ஆகிய இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT