சமீர்பாஷா

 
க்ரைம்

மாற்றுத் திறனாளியிடமிருந்து செல்போனை திருடி நூதன முறையில் 'ஜிபே' மூலம் மகனிடம் பணம் பறித்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மாற்றுத் திறனாளியிடமிருந்து செல்போனை திருடி,`ஜிபே' மூலம் அவரது மகனிடம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா (65). மாற்றுத் திறனாளியான இவர், ரமலான் மாதம் என்பதால் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள மசூதியில் தங்கியுள்ளார். இவர் கடந்த 5-ம் தேதி மதியம் பெரியமேடு மசூதிக்கு அருகே மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

செல்போன் இரவல்

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் காதர்பாஷாவிடம், `என் செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகிவிட்டது. ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' எனக் கேட்டார். பரிதாபப்பட்ட காதர் பாஷா தனது செல்போனை அவரிடம் கொடுத்தார்.

          

மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர், காதர்பாஷா நலனின் அக்கறை உள்ளது போல் பேசி, அவரது மகனின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டதோடு, இன்னொரு போன் செய்துவிட்டு தருகிறேன் எனக்கூறி செல்போனில் பேசியபடியே பைக்கில் அங்கிருந்து தப்பினார்.

விபத்து என பொய்

பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் காதர்பாஷாவின் மகனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, `விபத்தில் உனது தந்தை சிக்கிக் கொண்டார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறேன். சிகிச்சை செலவுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி வைக்கவும்' எனக்கூறி ஜிபே மூலம் ரூ.3.500-ஐ பெற்றுக் கொண்டார்.

சிறையில் அடைப்பு

அதன்பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த காதர்பாஷாவின் மகன், இது தொடர்பாக தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் செல்போனை திருடிச் சென்றதோடு, ஜிபே மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது ஆவடியைச் சேர்ந்த சமீர்பாஷா (28) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT