சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.10.70 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பய ணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது வந்த இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு வந்த அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து சோதனை செய்தனர்.
அதில் இருந்த 23 பார்சல்களை பிரித்து பார்த்தபோது, ரூ.10.70 கோடி மதிப்புள்ள 10.70 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.