க்ரைம்

சென்னை அரும்பாக்கத்தில் தாய், மகளை கத்திமுனையில் மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை

செய்திப்பிரிவு

அரும்பாக்கத்தில் நள்ளிர வில் வீடுபுகுந்து தாய் மற்றும் மகளை கத்தி முனையில் மிரட்டி, 27 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, அரும்பாக்கம், என்.எஸ்.கே 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, ருக்மணி (54) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வழக்கம் போல பணிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் ருக்மணியும் அவரது மகளும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். நள்ளிரவில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுள்ளது.

          

தூக்கக் கலக்கத்தில் ருக்மணி கதவைத் திறந்த போது, கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ருக்மணியை தள்ளிவிட்டு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், தாய் மற்றும் மகள் இருவரையும் கத்தி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து. 'சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டிய கொள்ளையன், பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள், ரூ.8,500 பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்ட ருக்மணி, உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் முகப்பேரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, முகப்பேர் விரைந்த போலீஸார், பதுங்கியிருந்த சுப்பிரமணி (28) என்ற இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்து 27 பவுன் நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். கைதானவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT