சென்னை: வண்ணாரப்பேட்டையில் பழுதடைந்த வீட்டின் பால்கனி திடீரென இடிந்து, சைக்கிளில் சென்ற வடமாநில இளைஞர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு (32). சென்னை யானைகவுனி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பழைய வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெரு வழியாக அவர் சென்றபோது, அங்குள்ள பழுதடைந்த வீட்டின் பால்கனி திடீரென இடிந்து பப்பு மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினர். பின்னர் பப்புவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இதற்கிடையே, சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.