சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதிமுதல் வரும் 30-ம் தேதிவரை 5 அடுக்கு பாதுகாப்பும், 24, 25, 26 ஆகிய தேதிகளில் மட்டும் உச்சக்கட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பும் அமலில் உள்ளது.
விமான நிலையத்தின் உள்பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், வெளிப்பகுதியில் போலீஸாரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்துக்குள் செல்லும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இப்படி உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும் நிலையில், நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல்-1 வருகை உள்பகுதியில், டிரான்சிட் விமானப் பயணிகள் செல்லக்கூடிய கேட் எண் 103 அருகே சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் பார்த்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இது பற்றி பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
பயணிகள் வருகை பகுதிக்குள் நின்றிருந்த அவரிடம் விமான டிக்கெட் அல்லது விமான நிலையத்துக்குள் வருவதற்கான பாஸ் எதுவும் இல்லை. அப்போது அந்த இளைஞர் விமான நிலையத்தையே, விலைக்கு வாங்க இருப்பதாகவும், அதற்காக விமான நிலையத்தை பார்வையிட உள்ளே வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா (26) என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உச்சக்கட்ட பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்ததால், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.