கடலூர்: போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழந்தது குறித்து அவரது நண்பர்களிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (18). ஐடிஐ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். 3 நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று பொன்னேரி திடீர்குப்பத்தைச் சேர்ந்த பிரசாந்த் (18), கருங்குழி தோப்பைச் சேர்ந்த விஜய்பிரசாத் (18) ஆகியோர் மனோஜ்குமாரை மயங்கிய நிலையில் வீட்டுக்கு அழைத்துவந்து படுக்க வைத்தனர்.
மனோஜின் தாய் நிஷாந்தி, மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் நிஷாந்தி புகார் அளித்தார்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மனோஜ்குமார் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது நண்பரான பிரசாந்த் (18) என்பவருடன் தங்கியிருந்தார். நேற்று மதியம் மனோஜ்குமார் தன்னிடம் இருந்த போதை ஊசியை போட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பிரசாந்த், விஜய்பிரசாத்தை வரவழைத்து மனோஜ்குமாரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி பெண்ணாடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.