பூமிநாதன்

 
க்ரைம்

திருவொற்றியூரில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூரில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (37) உள்ளிட்ட நான்கு கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை, பூமிநாதன் சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மேலிருந்த மண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் பூமிநாதன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், உடனடியாக மண்ணை அள்ளி அவரை மீட்க முயன்றனர். ஆனால், முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டையிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பூமிநாதன் மீட்கப்பட்டார். எனினும், மண்ணில் சிக்கியதால் ஏற்பட்ட கடும் மூச்சுத் திணறல் காரணமாக பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT